தமிழகத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ‘TN 2026’ திரைப்படத்தின் டீசர் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 2-ம் தேதி வெளியான இந்த டீசரில், நடிகர் நட்டி நடராஜன் ஒரு சூப்பர் ஸ்டார் அரசியல்வாதியாக நடித்துள்ளார். இது நேரடியாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைக் குறிவைத்து எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

விஜய்யின் நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள், அவரது உடை அலங்காரம் மற்றும் “ஒரு சக்தி பராசக்தி” போன்ற அவரது புகழ்பெற்ற வசனங்களைச் சித்திரப்பது போல டீசர் அமைந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது விஜய்யின் பிம்பத்தைச் சிதைக்கத் திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதி என்று டிவிகே நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்குச் சில நாட்களுக்கு முன்பு ஏப்ரல் 10-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது. ‘ஜனநாயகன்’ போன்ற படங்கள் தேர்தல் நடத்தை விதிகளால் முடக்கப்படும்போது, விஜய்யைப் பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து இந்தச் சதியில் ஈடுபடுவதாகவும் அவர் சாடியுள்ளார். மக்கள் இத்தகைய உள்நோக்கம் கொண்ட படங்களை ஆதரிக்க மாட்டார்கள் என்றும், இந்தப் படம் தோல்வியைச் சந்திக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், படம் திட்டமிட்டபடி வெளியாகுமா அல்லது தேர்தல் ஆணையம் இதில் தலையிடுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.