கேரளாவைச் சேர்ந்த சரண்யா என்ற இளம்பெண், கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள தாடியண்டமோல் மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்றபோது மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் ஹோம்ஸ்டே ஒன்றில் தங்கியிருந்த சரண்யா, நேற்று மதியம் 9 பேருடன் இணைந்து மலை ஏற்றத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த நாய்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மற்றவர்களிடம் இருந்து பிரிந்து அவர் மாயமாகியுள்ளார்.

“நான் வழிதவறிவிட்டேன்” என்று ஹோம்ஸ்டே உரிமையாளருக்குக் கடைசியாக போன் செய்த சரண்யாவின் செல்போன், அதன் பிறகு ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டது.

சுமார் 24 மணி நேரத்தைக் கடந்தும் அவர் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால், காவல்துறை மற்றும் வனத்துறையினர் அடங்கிய 4 தனிப்படைகள் அடர்ந்த காட்டுப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாலும், கனமழை பெய்து வருவதாலும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மோப்ப நாய்கள் உதவியுடன் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் சரண்யாவைத் தேடி வருகின்றனர். அவர் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று அந்தப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்கள் குலதெய்வத்திடம் சிறப்புப் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.