அதிமுக முன்னாள் சபாநாயகரும் அவிநாசி தொகுதி தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான தனபால் அக்கட்சித் தலைமை மீது அதிரடியான புகார்களைத் தெரிவித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுத்த தமக்கே தற்பொழுது போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவிநாசி தொகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அது குறித்துக் கட்சித் தலைமை தன்னிடம் கலந்தாலோசிக்கவில்லை என்றும் ஒரு முன்னாள் சபாநாயகருக்கான உரிய மரியாதையைத் தரவில்லை என்றும் அவர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவிநாசி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் அவர் தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து ராசிபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
தனபாலுக்கு நிலவும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் தொகுதிப் பக்கம் வருவதில்லை என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் நிலவி வந்த சூழலில் அவரது மகனுக்கும் கட்சித் தலைமை வாய்ப்பு வழங்க முன்வரவில்லை. இதய அறுவை சிகிச்சை செய்த போது கூடத் தன்னைக் கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து பார்க்கவில்லை என்றும் தனபால் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் அவிநாசி தொகுதியில் நிலவும் இந்த உட்கட்சிப் பூசல் வரும் சட்டமன்றத் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் நோக்கர்களிடையே பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
