துபாய் என்றாலே வானளாவிய கட்டிடங்களும், சொகுசு வாழ்க்கையும்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், அங்கு நிலவும் கடுமையான விலைவாசி மற்றும் இட நெருக்கடியை ‘virenvlogsdubai’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தும் இளைஞர் ஒருவர் வீடியோவாக வெளியிட்டு இணையத்தையே அதிர வைத்துள்ளார். தான் ஒரு வருடமாக வசிக்கும் மிகச்சிறிய அறையை அவர் வீடியோவில் சுற்றிக் காட்டுகிறார்.

அந்த அறையில் ஒரு நபர் எழுந்து நிற்கக் கூட போதிய இடமில்லை என்பதுதான் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருந்தபோதிலும், தனது லேப்டாப், கேமரா மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அந்தச் சிறிய இடத்திலேயே மிக நேர்த்தியாக அவர் அடுக்கி வைத்துள்ளார்.

​இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “இவ்வளவு சிறிய அறையில் என்னால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது, கிளாஸ்ட்ரோஃபோபியா வந்துவிடும்” என சிலர் கூற, “சொந்த ஊரில் விவசாயம் செய்திருக்கலாம், எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டுப் பணம் சம்பாதிக்க வேண்டும்?” என வேறு சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

கனவு தேசமான துபாயில் சாமானியர்கள் படும் கஷ்டத்தை இந்த வீடியோ அப்படியே பிரதிபலிப்பதாகப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ துபாயின் மினுமினுக்கும் முகத்திற்குப் பின்னால் இருக்கும் நிஜமான மறுபக்கத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.