சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வெறிநாய் ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி பகுதியில் சுற்றித் திரிந்த அந்த வெறிநாய், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் உட்பட மொத்தம் 3 பேரை ஓடி வந்து தாக்கியுள்ளது.

நாயின் பிடியில் சிக்கியவர்கள் வலியால் அலறவே, அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அந்த 3 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்த வெறிநாயைப் பிடித்துச் சென்றனர். தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடத் தயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் குமுறுகின்றனர்.