இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ரயில் புறப்பட்ட பிறகு, பிளாட்பாரத்தில் நின்ற இரு பெண்கள் ரயிலை நிறுத்தக் கோரி லோகோ பைலட்டிடம் கைகூப்பி அழுத காட்சி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், வந்தே பாரத் ரயில் பிளாட்பாரத்திலிருந்து மெதுவாக நகரத் தொடங்குகிறது. அப்போது தனது உடைமைகளுடன் ஓடி வரும் இரு பெண்கள், ரயிலைத் தவறவிட்ட பதற்றத்தில் லோகோ பைலட்டை நோக்கி கைகூப்பி ‘ப்ளீஸ்… ப்ளீஸ்’ என ரயிலை நிறுத்தக் கெஞ்சுகின்றனர்.

வழக்கமாக “ரயில் கிளம்பிவிட்டதா?” என வேடிக்கையாகக் கேட்கும் பயணிகளுக்கு மத்தியில், நிஜமாகவே ரயிலைத் தவறவிட்டு தவிக்கும் இவர்களது நிலை காண்போரை நெகிழச் செய்துள்ளது.

ஒரு ரயில் புறப்பட்ட பிறகு அதனை மீண்டும் நிறுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால், அந்த வீடியோவின் இறுதியில் ரயிலின் வேகம் சற்றே குறைவது போலத் தெரிகிறது. லோகோ பைலட் அந்தப் பெண்களின் நிலையைக் கண்டு மனிதாபிமான அடிப்படையில் ரயிலை மெதுவாக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், அந்தப் பெண்கள் ரயிலில் ஏறினார்களா என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை.

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் மத்தியில் இரு வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன:லோகோ பைலட்டின் செயலைப் பாராட்டுபவர்கள், “விதிமுறைகளை விட மனித நேயம் பெரியது; அந்தப் பெண்களின் அவசரத்தை உணர்ந்து உதவியது நெகிழ்ச்சி அளிக்கிறது” எனப் பதிவிட்டு வருகின்றனர்.

மற்றொரு தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “நேரத்திற்கு வந்த நூற்றுக்கணக்கான பயணிகளின் நேரத்தை ஒருவருக்காக வீணடிப்பது அநீதி. இது போன்ற செயல்கள் விபத்துகளுக்கு வழிவகுக்கும், எனவே லோகோ பைலட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் விதிமுறையா அல்லது மனிதாபிமானமா? எது முக்கியம் என்ற கேள்வியை இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.