இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்படும் சீன நிறுவனங்களுக்கு மத்திய அரசு மீண்டும் ஒரு பலத்த அடியை கொடுத்துள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சீன சிசிடிவி கேமராக்களின் விற்பனைக்கு மறைமுகத் தடை விதிக்கப்பட உள்ளது.

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘தர நிர்ணய சோதனை மற்றும் தரச் சான்றிதழ்’ (STQC) அமைப்பு, சிசிடிவி கேமராக்களுக்கான புதிய பாதுகாப்பு விதிகளைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு சிசிடிவி கேமராவிற்கும் STQC சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சீன நிறுவனங்களின் சிப்செட்கள் (Chipsets) பயன்படுத்தப்பட்ட கேமராக்களுக்கு இந்தச் சான்றிதழை வழங்க அதிகாரிகள் மறுப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் ஹிக்விஷன் (Hikvision), தஹுவா (Dahua) மற்றும் டிபி-லிங்க் (TP-Link) போன்ற முன்னணி சீன பிராண்டுகளின் விற்பனை இந்தியாவில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சீன தயாரிப்பு கேமராக்கள் மூலம் இந்தியாவின் முக்கிய இடங்களின் நேரடி காட்சிகளை சீனா ரகசியமாக கண்காணிக்கக்கூடும் எனப் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இதனால் புதிய விதிகளின்படி, கேமராவின் முக்கிய பாகங்கள், குறிப்பாக ‘சிஸ்டம்-ஆன்-சிப்’ (SoC) எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதை நிறுவனங்கள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். கடந்த 2024 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த விதிகளுக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு கால அவகாசம் தற்போது முடிவுக்கு வருகிறது.

ஒரு காலத்தில் இந்திய சிசிடிவி சந்தையில் மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமித்திருந்த சீன நிறுவனங்கள், தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளன. சிபி பிளஸ் (CP Plus), கியூபோ (Qubo), பிராமா (Prama), மேட்ரிக்ஸ் (Matrix) மற்றும் ஸ்பார்ஷ் (Sparsh) போன்ற இந்திய பிராண்டுகள் தைவான் நாட்டின் சிப்செட்களைப் பயன்படுத்தி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தங்களது சந்தையை விரிவுபடுத்தியுள்ளன.

சமீபத்திய ஆய்வின்படி, இந்திய சந்தையில் 80 சதவீதத்திற்கும் அதிகமான இடத்தை இந்திய நிறுவனங்களே பிடித்துள்ளன. இதுவரை 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி மாடல்கள் புதிய தரச் சான்றிதழைப் பெற்றுள்ளன. சீன உதிரிபாகங்களை முழுமையாகத் தவிர்த்த நிறுவனங்கள் மட்டுமே இனி இந்தியச் சந்தையில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.