தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளுடன் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இந்தச் சூழலில் ஆளுங்கட்சியான திமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட முக்கியப் பெயர்கள் விடுபட்டுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கோவை அல்லது சென்னை ஆகிய ஏதேனும் ஒரு தொகுதியில் திவ்யா சத்யராஜ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு மற்றும் வாரிசு அரசியல் விமர்சனங்களைத் தவிர்க்கும் நோக்கில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தமக்குத் தொகுதி ஒதுக்கப்படாத நிலையில் திவ்யா சத்யராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இன்னும் ஓரிரு நாட்களில் தமது அரசியல் பயணம் குறித்து ஒரு நல்ல செய்தியைப் பகிர்ந்து கொள்ளப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே திமுக சார்பில் போட்டியிட அவர் விருப்ப மனு அளித்திருந்த நிலையில் தற்பொழுது தொகுதி கிடைக்காததால் அவர் மாற்று முடிவு ஏதேனும் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேபோல் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் கோவை வைஷ்ணவி ஆகியோருக்கும் இந்த வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.