ஆந்திர மாநிலத்தில் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை அடித்துக் கொன்று, வீட்டின் பின்புறமே புதைத்த மனைவியின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபுரம் மாவட்டம், ஹனிமிரெட்டி பள்ளியைச் சேர்ந்த ஹனுமந்தராயுடு மற்றும் சுகன்யா தம்பதியினர் கடந்த 15 ஆண்டுகளாக பழைய குளம் பகுதியில் வசித்து வந்தனர்.

மேலும் சுகன்யாவிற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பை ஹனுமந்தராயுடு கண்டித்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுகன்யா, தனது கணவரை பாறாங்கல்லால் அடித்துக் கொலை செய்து, யாருக்கும் தெரியாமல் உடலை வீட்டின் பின்புறம் புதைத்து மறைத்துள்ளார்.

இந்தக் கொடூரக் கொலையை நேரில் பார்த்த அவர்களது மகள் அம்ருதாவை, யாருக்காவது சொன்னால் கொன்றுவிடுவதாக சுகன்யா மிரட்டி வைத்துள்ளார். இதற்கிடையில், தாய்க்கும் மகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், அம்ருதாவையும் கொல்ல சுகன்யா முயன்றபோது அவர் அங்கிருந்து தப்பித்துச் சென்று உறவினர்களிடம் உண்மையைக்கூறினார்.

இந்நிலையில் விஷயம் வெளியே தெரிந்ததை உணர்ந்த சுகன்யா காவல் நிலையத்தில் சரணடைந்தார். தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து, புதைக்கப்பட்ட ஹனுமந்தராயுடுவின் உடலைத் தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.