மத்திய கிழக்கு ஆசியாவில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் ஒரு புதிய மற்றும் ஆபத்தான உத்தியைக் கையாண்டு வருவதாக அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் இந்தத் திட்டம் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

ஈரான் மிகவும் தந்திரமாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஜே.டி. வேன்ஸ், “தற்கொலைப்படைத் தாக்குதலில் பயன்படுத்தப்படும் ஜாக்கெட்டுகளைப் போலவே, சிறிய ரக அணுஆயுத ஜாக்கெட்டுகளை (Nuclear Jackets) ஈரான் உருவாக்க வாய்ப்புள்ளது” என்று அச்சம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்க மண்ணில் பேரழிவை ஏற்படுத்த ஈரான் திட்டமிடுவதாக அவர் கூறியுள்ளார்.

உலகின் மிகச்சிறிய அணுக்கரு வெடிகுண்டுகள் சுமார் 23 கிலோ எடையுள்ள ‘வார்ஹெட்’ (Warhead) கொண்டவை. இவற்றின் அழிவு சக்தி 10 டன் TNT வெடிமருந்துக்கு இணையானது. அமெரிக்காவிடம் ஏற்கனவே இத்தகைய தொழில்நுட்பம் உள்ள நிலையில், அதே பாணியில் ஈரான் செயல்படத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

தற்போது ஈரானிடம் 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட 440 கிலோ யுரேனியம் உள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுவாக அணுஆயுதம் தயாரிக்க 90 சதவீத செறிவூட்டல் அவசியம். கையில் உள்ள யுரேனியத்தைக் கொண்டு ஈரானால் சுமார் 11 அணுஆயுதங்களைத் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அணுஆயுதப் பரவல் தடைச் சட்டத்திலிருந்து வெளியேறுவது குறித்தும் ஈரான் ஆலோசித்து வருகிறது.

இதனை பார்த்து அமெரிக்கா ஏன் பயப்படுகிறது தெரியுமா?

ஈரானிடம் தற்போது அமெரிக்காவைத் தாக்கும் அளவுக்கு நீண்ட தூர ஏவுகணைகளோ அல்லது போர் விமானங்களோ இல்லை. ஆனால், இந்த ‘ஜாக்கெட்’ வகை குண்டுகள் மனிதர்கள் மூலம் கொண்டு செல்லக்கூடியவை என்பதால், அவற்றை எளிதாகப் பயன்படுத்த முடியும்.

அமெரிக்காவிற்குள் ஏற்கனவே ஈரானின் ஆதரவு பெற்ற ‘ஸ்லீப்பர் செல்கள்’ ஊடுருவி இருக்கக்கூடும் என்ற சந்தேகம் உள்ளது. இவர்கள் மூலம் இந்த ஜாக்கெட் குண்டுகளை வெடிக்கச் செய்வது அமெரிக்கப் பாதுகாப்புப் படையினருக்குப் பெரும் சவாலாக அமையும்.

மேலும் பெரிய அணு குண்டுகள் அளவுக்கு இவை முழு நகரத்தையும் அழிக்காவிட்டாலும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களை ஒரே நேரத்தில் கொல்லும் திறன் கொண்டவை. இது உலகளவில் பெரும் பீதியையும் பொருளாதார நெருக்கடியையும் உருவாக்கும் என்று ஜே.டி. வேன்ஸ் எச்சரித்துள்ளார்.