ஈரான் நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல்களை அடுத்த 10 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் அரசின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஈரான் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த நாட்டின் மின் நிலையங்கள் மீதான தாக்குதல் நடவடிக்கைகளை 10 நாட்களுக்கு ஒத்திவைக்கிறேன். இந்த முடிவு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணி வரை அமலில் இருக்கும். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடைபெற்று வருகின்றன.
ஊடகங்களில் வெளியாகும் எதிர்மறையான செய்திகளையும் அவர் இதன் மூலம் நிராகரித்துள்ளார். மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்த பிறகு, ஈரான் மீதான தாக்குதலைக் குறைப்பதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது இதுவே முதல் முறையாகும். அமெரிக்கா தனது நிலைப்பாட்டில் சற்று மென்மை காட்டினாலும், இஸ்ரேல் இதற்கு உடன்படுவதாகத் தெரியவில்லை. ஈரானின் பல்வேறு இலக்குகள் மீது இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
அமெரிக்காவின் இந்த 10 நாள் அவகாசம், ஒரு நிரந்தர போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்குமா அல்லது தற்காலிகமான ஒரு உத்தியா என்பது குறித்து பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர். அமெரிக்காவின் இந்த முடிவுக்குக் கைமாறாக, ஈரான் ஒரு ‘விலைமதிப்பற்ற பரிசை’ வழங்கியுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 10 எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. “ஈரான் முதலில் 8 கப்பல்களை விடுவிக்கவே ஒப்புக்கொண்டது, அதில் சில பாகிஸ்தான் கொடியுடன் இருந்தன. இறுதியில் அந்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது” என்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் டிரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
அதே நேரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனக்குத்தானே முடிவு செய்து பேசுவதாகவும் அவர்கள் ஈரானுடன் எந்த ஒரு விதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனவும் ஈரான் நாட்டு அரசாங்கம் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
