ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் தலைவர் அயத்துல்லா அலி காமேனி மற்றும் 180 சிறுமிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் போர் அறிவித்து 26 நாட்களாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த மோதலால் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வரத்து தடைபட்டு, சீனா, ஜப்பான் மற்றும் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தற்போது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களுக்கும் கட்டணம் வசூலிக்கும் புதிய சட்ட மசோதாவை ஈரான் அரசு தயாரித்துள்ளது.
ஒரு நாட்டின் கடல் எல்லை வழியாகப் பொருட்கள் செல்லும்போது கட்டணம் வசூலிப்பது இயல்பான நடைமுறைதான் என்று ஈரான் நாடாளுமன்றம் விளக்கம் அளித்துள்ளது. இந்த மசோதா விரைவில் சட்டமாக்கப்பட உள்ளதால், சர்வதேச வர்த்தகத்தில் மேலும் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
