புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க இடையே தொகுதிப் பங்கீடு முடிவாகி, காங்கிரஸ் 16 இடங்களிலும், தி.மு.க 14 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. வேட்புமனுத் தாக்கல் முடிந்த பிறகு இந்த உடன்பாடு ஏற்பட்டதால், பல தொகுதிகளில் இரு கட்சிகளும் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்திருந்தன.
பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற தொகுதிகளில் மனுக்களைத் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கூட்டணியில் தொகுதி ஒதுக்குவதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிருப்தி அடைந்துள்ளது. கடந்த தேர்தல்களில் கூட்டணியில் அங்கம் வகித்த வி.சி.க, இந்த முறை 3 தொகுதிகளைக் கோரியிருந்தது.
ஆனால், காங்கிரஸ் கட்சி தொகுதிகளை ஒதுக்க முன்வராத நிலையில், தி.மு.க தரப்பிலிருந்து ஒரு தொகுதி ஒதுக்குவதாகக் கூறப்பட்டது. இருப்பினும், வேட்புமனுத் தாக்கல் முடிந்த பிறகும் எந்தத் தொகுதி என்பது உறுதி செய்யப்படாததால், கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் குழப்பமும் மன உளைச்சலும் ஏற்பட்டது. இதன் காரணமாக, புதுச்சேரியில் ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய 3 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கூட்டணியில் உரிய மதிப்பும், தெளிவான முடிவும் கிடைக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் மட்டும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
