மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் புஷேர் அணுமின் நிலையம் மீது மீண்டும் ஒரு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த 17-ம் தேதி இதே போன்ற தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் தலைநகர் தெக்ரானில் உள்ள முக்கிய இலக்குகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் அணுமின் நிலைய வளாகத்திற்குள் ஏவுகணை ஒன்று விழுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் அணுசக்தி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், அணுமின் நிலையத்திற்குள் ஏவுகணை விழுந்த போதிலும், பெரும் தொழில்நுட்ப சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.

இருப்பினும், அமைதி வழியில் செயல்படும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்றும், இது பிராந்திய பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நோக்கி ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி வருவதால் அப்பகுதியில் போர் மேகம் சூழ்ந்து காணப்படுகிறது.