அமெரிக்காவை ஒரு ‘பயங்கரவாத நாடு’ என்று கடுமையாக விமர்சித்துள்ள வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அணு ஆயுதங்களைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வட கொரிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவது அமெரிக்காவின் ராணுவக் கொள்கைகளே என்று குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறும்போது,
“அமெரிக்காவின் அடாவடிப் போக்குகளுக்கு அஞ்சி, வட கொரியா ஒருபோதும் தனது அணு ஆயுதங்களைக் கைவிடாது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய அணுசக்தித் திறன் மிகவும் அவசியமானது. ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்கள், நாம் அணு ஆயுதங்களைத் தக்கவைத்துக் கொள்ள எடுத்த முடிவு சரியானது என்பதையே உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளது” என்று கிம் ஜாங் உன் குறிப்பிட்டார்.
தனது அண்டை நாடான தென் கொரியாவை ‘மிகப்பெரிய எதிரி’ என்று வர்ணித்த கிம், அந்நாடு எல்லையைத் தாண்டினால் இரக்கமற்ற முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தார். எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்ளவும், எதிரிகளை முறியடிக்கவும் வட கொரிய ராணுவம் முழுவீச்சில் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ஈரான் – அமெரிக்கா இடையேயான போர்ச் சூழலை மேற்கோள் காட்டி கிம் ஜாங் உன் பேசியிருப்பது, சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வட கொரியா தனது ராணுவ வலிமையை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
