மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலியைப் புரட்டிப் போட்டுள்ளது. முக்கிய எரிபொருள் போக்குவரத்துப் பாதைகளை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், உலக நாடுகளுக்கான சரக்குக் கப்பல்கள் முடக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக, பிலிப்பைன்ஸ் அதிபர் போங்போங் மார்கோஸ், அந்நாட்டில் எரிசக்தி அவசரநிலையை அறிவித்துள்ளார்.
தற்போது பிலிப்பைன்ஸில் 45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மட்டுமே இருப்பில் உள்ள நிலையில், அதனைப் பெருக்கப் பல்வேறு நாடுகளிலிருந்து 10 லட்சம் பேரல் எண்ணெயை அவசரகால அடிப்படையில் வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஓராண்டுக்கு அமலில் இருக்கும் இந்த அவசரநிலை மூலம், எரிபொருள் கொள்முதலுக்கு அரசுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், எரிபொருளைப் பதுக்குபவர்கள் மற்றும் அதிக லாபம் பார்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு தலா 5,000 பெசோ (சுமார் ரூ.7,000) மானியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும், எரிபொருள் மீதான கலால் மற்றும் வாட் வரிகளை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தி, மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அந்நாட்டு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதால், அந்நாட்டின் அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.
