இங்கிலாந்தில் நடைபெறும் ‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், சன் நெட்வொர்க் குழுமத்தைச் சேர்ந்த காவ்யா மாறன், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை 2.35 கோடி ரூபாய்க்கு வாங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்திய உரிமையாளர் ஒருவர் பாகிஸ்தான் வீரருக்கு இவ்வளவு பெரிய தொகையை வழங்கியதைச் சுட்டிக்காட்டி முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது கட்டுரையில் கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்திய உரிமையாளர்கள் கொடுக்கும் பணம் பாகிஸ்தான் அரசுக்கு வருமான வரியாகச் சென்று, அது மறைமுகமாக இந்திய ராணுவ வீரர்களுக்கு எதிரான ஆயுதங்களாக மாறுகிறது என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். ​கவாஸ்கரின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து, அவர் கடந்த காலங்களில் பாகிஸ்தான் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்றதைச் சுட்டிக்காட்டி ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குத் தற்போது காட்டமாகப் பதிலளித்துள்ள கவாஸ்கர், தான் ஐசிசி மற்றும் ஏசிசி அமைப்புகளின் வர்ணனையாளராக மட்டுமே பணியாற்றினேன் என்றும், எந்தவொரு இந்திய நிறுவனத்திடம் இருந்தும் பாகிஸ்தானுக்குத் தனிப்பட்ட முறையில் பணம் செல்லவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். “இந்தியர்கள் பாகிஸ்தானியர்களுக்குப் பணம் கொடுப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்” என்பதே தனது உறுதியான நிலைப்பாடு என்று கூறியுள்ள அவர், வெளிநாடுகளில் துணை நிறுவனங்கள் வைத்திருந்தாலும் இந்திய உரிமையாளர்கள் பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.