உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில், கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த 30 வயது இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஷாஜஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனல் சந்திரா (30) என்ற இளைஞர், கடந்த சனிக்கிழமை தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ளார். அவர் பேட்டிங் செய்து முடித்துவிட்டு மைதானத்திற்குத் திரும்பிய போது, திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்திலேயே அவர் அனைவர் முன்னிலையிலும் மயங்கி விழுந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த சக வீரர்கள், அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சுமார் 40 நிமிடங்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக பரேலியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

சோனல் சந்திரா ஒரு தீவிர கிரிக்கெட் ஆர்வலர் மட்டுமல்லாமல், ஒரு தகுதி வாய்ந்த நடுவராகவும்  இருந்துள்ளார். அவர் இதுவரை 100-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ளார். சம்பவத்தன்று அவர் விளையாடுவதை அவரே வீடியோ எடுத்துள்ளார். அவர் மயங்கி விழுவதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு வரை எடுக்கப்பட்ட அந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

உயிரிழந்த சோனல் சந்திரா தனது பெற்றோருக்கு ஒரே மகன் என்பதுடன், அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்தவர். அவரது திடீர் மறைவு அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அண்மைக்காலமாக விளையாட்டு மைதானங்களில் இளைஞர்களுக்கு ஏற்படும் திடீர் மாரடைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தீவிர உடல் உழைப்பில் ஈடுபடும்போது இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், விளையாட்டு மைதானங்களில் முதலுதவி வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.