மும்பையில் திருமணமான பெண் ஒருவரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, அவரிடமிருந்து 33 லட்சம் ரூபாய் பறித்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மீரா ரோட்டில் ஓட்டுநராகப் பணிபுரியும் அமர் மகாகோன்கர் என்ற நபர், ஃபேஸ்புக் மூலம் அந்தப் பெண்ணுக்கு நட்பு ரீதியாக அறிமுகமாகியுள்ளார்.

பெண்களின் குடும்பப் பிரச்சனைகளைக் கணிப்பது போலப் பேசி அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதை வழக்கமாகக் கொண்ட அவர், இந்தப் பெண்ணை கடற்கரைக்கு அழைத்துச் சென்று அவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோவை எடுத்து மிரட்டத் தொடங்கியுள்ளார்.

தொடர் மிரட்டலால் மனமுடைந்த அந்தப் பெண், தனது கணவருக்கு தற்கொலை செய்துகொள்ளப் போவதாகச் செய்தி அனுப்பியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர், மனைவியிடம் உண்மையை கேட்டறிந்த பின் மால்வானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில் அந்த நபர் ஜோதிடர் அல்ல என்பதும், பெண்களை ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டிருந்தவர் என்பதும் தெரியவந்தது. தற்போது அந்த நபரைக் கைது செய்துள்ள போலீசார், அவர் வேறு எந்தப் பெண்களையாவது இதுபோல ஏமாற்றியுள்ளாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.