குஜராத் முதல்வர் மற்றும் நாட்டின் பிரதமர் என ஒட்டுமொத்தமாக நீண்ட காலம் பதவி வகித்த தலைவர்கள் பட்டியலில், சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி முறியடித்துள்ளார்.

சுதந்திரத்திற்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியை மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெறச் செய்து சாதனை படைத்த பிரதமர் மோடி, தற்போது மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளார். குஜராத் முதல்வராக 3 முறையும், நாட்டின் பிரதமராக 3-வது முறையும் பொறுப்பு வகித்து வரும் அவர், இன்றுடன் மொத்தம் 8,931 நாட்களை ஆட்சித் தலைவராக நிறைவு செய்துள்ளார். இதன் மூலம் சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் (8,930 நாட்கள்) சாதனையை அவர் கடந்துள்ளார்.

பிரதமரின் இந்த வரலாற்றுச் சாதனை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது, கடந்த பல தசாப்தங்களாக பிரதமர் மோடி ஆற்றி வரும் சேவையால், இந்தியாவில் ஒரு புதிய சகாப்தம் உருவாகியுள்ளது. ஏழைகளுக்கான உரிமைகளை மீட்டெடுத்தது முதல், வளர்ச்சியில் புதிய உச்சங்களைத் தொட்டது வரை தேசத்தின் பெருமையை உலக அரங்கில் அவர் மிளிரச் செய்துள்ளார்.

மேலும் கடந்த 24 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல், நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் அவர் பணியாற்றி வருகிறார். அவரது இந்த அர்ப்பணிப்புதான் அவரை 3 முறை குஜராத் முதல்வராகவும், 3 முறை நாட்டின் பிரதமராகவும் மக்கள் தேர்ந்தெடுக்கக் காரணமாக அமைந்துள்ளது. அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையும் பாசமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று கூறியுள்ளார்.