மும்பையை அடுத்த கல்யாண் ரயில் நிலையத்தில் நபர் ஒருவர் திடீரென மின்சாரக் கம்பத்தின் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டதால், சுமார் இரண்டு மணி நேரம் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மின்சாரம் தாக்கியதில் அந்த நபர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார்.

அதாவது கல்யாண் ரயில் நிலையத்தின்  நேற்று மதியம் 1:30 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென ரயில்வே மின்சாரக் கம்பத்தின் (OHE Pole) மீது ஏறினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF), அவரை கீழே இறங்குமாறு நீண்ட நேரம் சமாதானம் செய்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by NDTV Marathi (@ndtvmarathi)

ரயில்வே போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அந்த நபர் செல்போன் வேண்டுமெனக் கேட்டு அடம்பிடித்துள்ளார். போலீஸார் அவரிடம் ஒரு செல்போனை வழங்கினர். அதைப் பெற்றுக்கொண்ட அவர், சிறிது நேரம் கழித்து திடீரென அந்தப் போனை கீழே வீசினார். தொடர்ந்து ஒரு கம்பத்திலிருந்து மற்றொரு கம்பத்திற்குத் தாவிச் சென்றதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 மற்றும் 3-வது நடைமேடைகளுக்கான மின் விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

சுமார் ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின்சாரக் கம்பி மீது அந்த நபர் பட்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை மீட்ட போலீஸார், உடனடியாக மும்பை சயான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவத்தால் கல்யாண் ரயில் நிலையத்தில் உள்ள 5 நடைமேடைகளிலும் சுமார் இரண்டு மணி நேரம் ரயில் போக்குவரத்து முடங்கியது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் அந்த நபர் யார்? எதற்காக இத்தகைய விபரீத செயலில் ஈடுபட்டார்? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.