புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு குழப்பங்களால் மனுத்தாக்கல் மந்தமாக இருந்தது. குறிப்பாக, புதுவைக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முதலமைச்சர் ரங்கசாமி உறுதியாக இருந்ததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இழுபறி நீடித்தது.

இந்தச் சூழலில், திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று திரும்பிய முதலமைச்சர் ரங்கசாமி, கதிர்காமம் முருகன் கோவிலில் தனது வேட்புமனுக்களை வைத்து வழிபாடு செய்து முறைப்படி கையெழுத்திட்டார்.இதனைத் தொடர்ந்து, ரங்கசாமி தனது சொந்த தொகுதிகளான தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரண்டு இடங்களிலும் அதிகாரிகளிடம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தார்.

அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், அவருக்கு ரூ.21.25 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.27.78 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரி தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.