ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் விக்டோரியா பேஸ் (Victoria Base) ராணுவத் தளவாட மையம் ஆகியவற்றைக் குறிவைத்து நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது வெடிகுண்டுகள் ஏந்திய டிரோன்கள் மோதித் தாக்கின. இந்தத் தாக்குதலின் விளைவாகத் தூதரக அலுவலகத்தில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. வானை முட்டும் அளவிற்கு எழுந்த கரும்புகை, பல கிலோமீட்டர் தூரத்திற்குத் தெரிந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ‘அஷாப் அல்-கஹ்ஃப்’ (Ashab al-Kahf) அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளது. ஈரான் – இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான நேரடிப் போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்கச் சொத்துக்கள் மற்றும் ராணுவ நிலைகளை இந்தக் குழுக்கள் தொடர்ந்து குறிவைத்து வருகின்றன.

சர்வதேச விமான நிலையத்திற்கு மிக அருகிலேயே இந்தத் தாக்குதல் மற்றும் தீ விபத்து நடந்திருப்பதால், பாக்தாத் விமான நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஈராக்கில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், அங்கு தங்கியுள்ள அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்கத் தூதரகம் மீதான இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.