ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிராகத் தனது ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்குப் பிரிட்டன் அதிரடியாக அனுமதி வழங்கியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்த, பிரிட்டனில் உள்ள ராணுவத் தளங்களை அமெரிக்கப் படைகள் பயன்படுத்திக்கொள்ளப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆரம்பத்தில் இந்தத் தாக்குதலில் நேரடியாக ஈடுபட மறுத்த பிரிட்டன், தற்போது மத்திய கிழக்கில் உள்ள தனது நட்பு நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆர்ஏஎஃப் ஃபேர்ஃபோர்டு மற்றும் டியாகோ கார்சியா ஆகிய முக்கியத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்துவதன் மூலம் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இந்தப் போரில் பிரிட்டன் நேரடியாகப் பங்கேற்காது என்றும், தற்காப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் டவுனிங் தெரு தெளிவுபடுத்தியுள்ளது. பிரிட்டன் போதுமான ஒத்துழைப்பு வழங்கவில்லை என அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதி சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாப்பதே தங்களின் முதன்மை நோக்கம் எனத் தெரிவித்துள்ள பிரிட்டன் அமைச்சர்கள், அதே சமயம் இந்தப் பதற்றத்தை உடனடியாகத் தணிக்கவும், போருக்கு விரைவான தீர்வு காணவும் அழைப்பு விடுத்துள்ளனர். பிரிட்டனின் இந்தத் திடீர் மனமாற்றம் ஈரானுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.