மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அண்டை நாடான இலங்கை ஒரு அதிரடியான மற்றும் துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. ஈரானுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தத் தனது மண்ணைப் பயன்படுத்த அமெரிக்கா கேட்ட அனுமதியை இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

ஜிபூட்டி தளத்திலிருந்து ஏவுகணைகளுடன் கூடிய இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை மத்தள சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்த விடுக்கப்பட்ட கோரிக்கையை, நாட்டின் இறையாண்மை மற்றும் நடுநிலைத் தன்மையைக் கருத்தில் கொண்டு நிராகரித்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அதேபோல், இந்தியாவில் பயிற்சியை முடித்துத் திரும்பிய ஈரானின் 3 போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் தங்குவதற்கு அனுமதி கோரியிருந்த நிலையில், அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்த அதே காரணத்திற்காக ஈரானுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

யாருடைய அழுத்தத்திற்கும் பணியாமல், இலங்கை மண்ணை எந்தவொரு ராணுவ நடவடிக்கைக்கும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அதிபர் பேசியபோது நாடாளுமன்றமே கைதட்டலால் அதிர்ந்தது.

அமெரிக்கா தங்களுக்குப் பெரிய ஏற்றுமதி சந்தையாக இருந்தாலும், ஈரான் தங்களது தேயிலையை வாங்கும் முக்கிய நாடாக இருந்தாலும், நீதியின் பக்கமே நிற்போம் என இலங்கை எடுத்துள்ள இந்தத் ‘தில்’லான முடிவு உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது.