கிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 5 மாத பெண் குழந்தையைக் கொலை செய்து கிணற்றில் வீசிய மாமனார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மருமகளைப் போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராமச்சந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் (30). டிராக்டர் டிரைவரான இவருக்கு, சத்யவாணி (23) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். தமிழரசன் தனது தந்தை ராஜன் (55) மற்றும் தாய் லட்சுமியுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். இந்நிலையில், மரம் அறுக்கும் தொழிலாளியான ராஜனுக்கும், அவரது மருமகள் சத்யவாணிக்கும் இடையே முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது. தமிழரசன் இல்லாத நேரங்களில் இருவரும் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.
சத்யவாணிக்கு முதல் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களிலேயே மீண்டும் கர்ப்பமானதால் தமிழரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தனது தந்தைக்கும் மனைவிக்கும் இடையே இருந்த பழக்கம் குறித்துத் தெரிந்த தமிழரசன், பலமுறை மனைவியைக் கண்டித்தும் அவர்கள் தங்களது தொடர்பைக் கைவிடவில்லை. இதற்கிடையே, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சத்யவாணிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து வீடு திரும்பிய தமிழரசன், தனது 5 மாதக் குழந்தையைக் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். சத்யவாணியிடம் கேட்டபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். தேடிப் பார்த்தபோது, வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குழந்தையின் உடல் பிணமாகக் கிடந்தது மீட்கப்பட்டது.
தகவலறிந்து வந்த வேப்பனப்பள்ளி போலீசார், சத்யவாணியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சம்பவத்தன்று ராஜன் தனது மருமகளை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அப்போது குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த ராஜன், குழந்தையின் மூச்சை நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலைக் கிணற்றில் வீசியுள்ளார். இந்தத் துயரச் சம்பவம் தெரிந்தும், தனது கள்ளக்காதலனான மாமனாரைக் காப்பாற்ற சத்யவாணி உண்மையை மறைத்துக் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளார்.
மேலும் இதையடுத்து, ராஜன் மற்றும் சத்யவாணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுக்காகப் பெத்த மகளையே தாயும், பேத்தியைத் தாத்தாவும் சேர்ந்து பலிகொடுத்தச் சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
