பீகார் மாநிலம் பேகுசராய் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை திருடப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மம்தா குமாரி என்ற பெண், தனது கர்ப்ப காலத்தின் போது எடுக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் இரட்டைக் குழந்தைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகக் கூறுகிறார்.
பிரசவத்தின் போது இரண்டு குழந்தைகளின் அழுகுரலைத் தான் கேட்டதாகவும், ஆனால் மயக்கம் தெளிந்து பார்த்தபோது மருத்துவமனை நிர்வாகம் ஒரு பெண் குழந்தையை மட்டுமே தன்னிடம் ஒப்படைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்துக் கேட்டபோது மருத்துவமனை ஊழியர்கள் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், பிரசவத்தின் போது ஒரு குழந்தை மட்டுமே பிறந்ததாகக் கூறியுள்ளது. மேலும், பிரசவம் முடிந்து மூன்று மாதங்கள் கழித்து இந்தப் புகார் எழுப்பப்படுவதால் இதில் சந்தேகம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் உறுதியாக இருப்பதால், வீர்பூர் போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, அந்த மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
