தங்கம் வாங்கக் காத்திருப்பவர்களுக்கு இன்று ஒரு ஜாக்பாட் நாள்! சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்குச் சரிந்துள்ளது. காலையில் சவரனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.3,200 சரிந்து, ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் ரூ.5,360 குறைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றமே இந்த அதிரடி வீழ்ச்சிக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
நேற்று வரை ஒரு சவரன் தங்கம் ரூ.1.20 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், இன்றைய அதிரடி சரிவால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் திடீர் விலை வீழ்ச்சி நகைக்கடை அதிபர்களுக்கே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை இனி குறையுமா அல்லது மீண்டும் ஏறுமா என்கிற குழப்பம் ஒருபுறம் இருந்தாலும், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்கம் வாங்க மக்கள் நகைக்கடைகளில் அலைமோதி வருகின்றனர்.
