ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மனிதாபிமானமற்ற முறையில் அரங்கேறியுள்ள ஒரு மூடநம்பிக்கை சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தில், ஒரு நபர் “அவன் திருடனாக இருந்தால் அவனது கைகள் எரிக்கப்படும், குற்றமற்றவனாக இருந்தால் கைகளுக்கு ஒன்றும் ஆகாது” என்ற விசித்திரமான மற்றும் கொடூரமான சோதனையை முன்வைத்துள்ளார்.

மேலும் திருட்டுச் சந்தேகத்தின் பேரில், அங்கிருந்த ஒரு அப்பாவி இளைஞனின் இரண்டு கைகளும் வலுக்கட்டாயமாக கொதிக்கும் நீரில் முக்கப்பட்டுள்ளன. இந்த காட்டுமிராண்டித்தனமான செயலால் அந்த வாலிபரின் கைகள் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி, அவர் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் அறிவியல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலும், இத்தகைய கொடிய மூடநம்பிக்கைகளும் சட்டத்தைக் கையில் எடுக்கும் அராஜகங்களும் தொடர்வது வேதனையளிக்கிறது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளைப் பறித்து, சந்தேகத்தின் பெயரால் இப்படிப்பட்ட கொடூரமான சித்திரவதைகளைச் செய்பவர்கள் மீது சட்டம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சமூகக் கொடுமைகளுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.