‘வீட்டிலிருந்து வேலை’ என்பது பயண நேரத்தை மிச்சப்படுத்தவும், குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவும் உதவும் ஒரு வரப்பிரசாதமாகவே பலராலும் பார்க்கப்படுகிறது. ஆனால், சமீபத்திய ஆய்வுகளின்படி, இது ஊழியர்களின் மனநலம் மற்றும் உடல்நலத்திற்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக மாறி வருகிறது. அலுவலகத்திற்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால், மற்ற மனிதர்களுடனான நேரடித் தொடர்பு முற்றிலும் அற்றுப் போகிறது.

இந்தத் தனிமை, ஊழியர்களிடையே ‘டிப்ரஷன்’ மற்றும் ‘ஆங்க்சைட்டி’ போன்ற கடுமையான மனநலப் பிரச்சினைகளை உருவாக்குகிறது. குறிப்பாக, தனியாக வசிப்பவர்களிடம் இந்தத் தனிமை உணர்வு 83% வரை அதிகரித்து, அவர்களின் மன அழுத்தத்தை இரட்டிப்பாக்குவதாகத் தரவுகள் எச்சரிக்கின்றன.

மேலும் மனநல பாதிப்புகள் ஒருபுறமிருக்க, இந்த வேலைமுறை ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் மெல்லச் சிதைக்கிறது. அலுவலகம் மற்றும் வீடு என்ற எல்லைக்கோடு மறைந்துவிடுவதால், ஊழியர்கள் தங்களையும் அறியாமல் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக, அதாவது நள்ளிரவு வரை வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இதனால் ஏற்படும் கடுமையான ‘பர்ன்அவுட்’ உடற்பயிற்சியின்மை மற்றும் சீரற்ற உணவுப் பழக்கம் ஆகியவை உடல் ஆரோக்கியத்தைக் கேள்விக்குறியாக்குகின்றன. போக்குவரத்து நெரிசலும், அலுவலகப் பயணச் செலவும் மிச்சமாவது போல் தோன்றினாலும், உண்மையில் அது மருத்துவச் செலவுகளாகவும், மன அமைதியற்ற வாழ்க்கையாகவுமே ஊழியர்களுக்குத் திரும்பக் கிடைக்கிறது.