மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கின் விசாரணையின் போது, தந்தை ஒருவர் தனது மனைவியின் சிதைந்த கருவை நீதிபதிகள் முன் சமர்ப்பித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாருதி சுசூகி நிறுவனத்தில் நடைபெற்ற ரூ.200 கோடி முறைகேட்டை தான் அம்பலப்படுத்தியதால், தனது குடும்பம் தொடர் தாக்குதலுக்கு உள்ளாவதாக அந்த நபர் குற்றம் சாட்டினார்.

இதன் ஒரு பகுதியாக நடந்த விபத்தில் தனது மனைவியின் கரு சிதைந்ததாகவும், இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதி கிடைக்க வேண்டி சிதைந்த கருவை நீதிமன்றத்திற்கே கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார். இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த நீதிபதி ஹிமான்ஷு ஜோஷி தலைமையிலான அமர்வு, நீதிமன்ற அறையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் ஆட்சேபனைக்குரியது எனக் கூறி அவரைக் கண்டித்தது.

இந்நிலையில் மனுதாரரின் குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்த நீதிமன்றம், அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது. மனுதாரரின் இழப்புக்கு வருத்தம் தெரிவித்த நீதிபதிகள், பரபரப்பை ஏற்படுத்துவதற்காக நீதிமன்ற மாண்பைச் சிதைக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.