இந்தியாவின் அண்டை நாடான சீனாவுடனான உறவில் பல சவால்கள் நீடித்து வரும் நிலையில், சீனாவிற்கான புதிய இந்தியத் தூதராகத் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விக்ரம் கே. துரைசாமி (Vikram K. Doraiswami) அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார். 1992-ம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் (IFS) அதிகாரியான இவர், தற்போது இங்கிலாந்திற்கான இந்திய உயர் ஆணையராகப் பணியாற்றி வருகிறார். ஒரு காலத்தில் பத்திரிகையாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, இன்று நாட்டின் மிக முக்கியமான ராஜதந்திரப் பதவியை எட்டியிருக்கும் இவரது வளர்ச்சி பலரையும் வியக்க வைத்துள்ளது.

​விக்ரம் துரைசாமி வெறும் அதிகாரி மட்டுமல்ல, சீனம், பிரஞ்சு மற்றும் கொரிய மொழிகளில் சரளமாகப் பேசும் புலமை பெற்றவர். இது சீனாவுடனான பேச்சுவார்த்தைகளில் இந்தியாவுக்குப் பெரும் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2002-ம் ஆண்டு பிரதமர் அலுவலகத்தில் தனிச் செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், வெளியுறவுக் கொள்கைகளில் கைதேர்ந்தவர். சீன எல்லைப் பதற்றங்கள் நீடிக்கும் சூழலில், ஒரு தமிழரின் கையில் இந்த முக்கியப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பது இந்திய அரசியல் மற்றும் ராஜதந்திர வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.