மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் எரிசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குத் தான் அனுமதி அளிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக மறுத்துள்ளது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் 90 சதவீத திரவ இயற்கை எரிவாயுவை (LNG) விநியோகம் செய்யும் கத்தாரின் ‘ராஸ் லஃபான்’ (Ras Laffan) தொழில்துறை நகரை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு கத்தார் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. கத்தார் பிரதமர், அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃபைத் தொடர்புகொண்டு தனது கண்டனத்தைப் பதிவு செய்ததை அடுத்து, அதிபர் டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக அமெரிக்க ஊடகமான ‘ஆக்சியோஸ்’ (Axios) தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஈரானின் பொருளாதார முதுகெலும்பான ‘சவுத் பார்ஸ்’ எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வெள்ளை மாளிகை பச்சைக்கொடி காட்டியதாகவும், இது குறித்து டிரம்பிற்கு முழுமையாகத் தெரியும் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால், கத்தார் மீதான ஈரானின் பதில் தாக்குதலால் உலகளாவிய எரிவாயு விநியோகம் பாதிக்கப்படும் என உணர்ந்த டிரம்ப், தற்போது “எனக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது” எனத் தற்காப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“கத்தார் ஒரு நிரபராதி; அதன் மீது நடத்தப்படும் தாக்குதலை ஈரான் நிறுத்த வேண்டும். மீண்டும் கத்தார் தாக்கப்பட்டால் அமெரிக்கா மிக வலிமையான பதிலடி கொடுக்கும்” எனத் தெரிவித்துள்ள டிரம்ப், இனி ஈரானிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களை இஸ்ரேல் தாக்காது என்றும் உறுதியளித்துள்ளார். 9 மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எரிவாயு நிலையங்களை ஈரான் ஒரே நேரத்தில் தாக்கி வரும் வேளையில், டிரம்பின் இந்த அறிவிப்பு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் கத்தாரின் வடக்கே அமைந்துள்ள ராஸ் லஃபான் சுத்திகரிப்பு நிலையம் முடக்கப்பட்டால் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகம் முற்றிலுமாகத் தடைபடும். இது உலகப் பொருளாதாரத்தையே நிலைகுலையச் செய்யும் என்பதால், கத்தாரின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா தற்போது முனைப்பு காட்டி வருகிறது.