நடிகர் ரஜினிகாந்த் குறித்துத் தான் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) மாநில நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசிய ஆதவ் அர்ஜுனா, “தி.மு.க.வின் மிரட்டல் காரணமாகவே நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இது ரஜினி ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக இன்று (மார்ச் 17) அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த், “காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று கொளத்தூரில் நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிர்வாகியும், ரஜினி ரசிகருமான அசோக் என்பவர் அதிரடியாக ஒரு கருத்தை முன்வைத்தார். “ரஜினிகாந்த் பற்றி த.வெ.க.வில் யார் தவறாகப் பேசினாலும் நான் கேள்வி கேட்பேன். ரஜினியைப் பற்றிப் பேசியதற்கு இந்த மேடையிலேயே விளக்கம் அளிக்க வேண்டும்” என்று அவர் கூறியது கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து மேடை ஏறிய ஆதவ் அர்ஜுனா, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். அவர் பேசியதாவது, தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் மீது எங்களுக்கு வெறுப்பு கிடையாது, அன்பு மட்டுமே இருக்கிறது. அவரைச் சிறுமைப்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. எனது பேச்சு அவருக்கு வருத்தத்தைக் கொடுத்திருந்தால், அதற்காக எனது வருத்தத்தையும், பகிரங்க மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்  “ரஜினிகாந்த் பயந்துவிட்டார் என்று நான் சொல்லவில்லை; அது தி.மு.க.வின் சூழ்ச்சி என்றுதான் கூறினேன். ரஜினியின் அறிக்கையைப் படித்தேன், அவரது உணர்வுகளுக்கு நான் மதிப்பளிக்கிறேன். த.வெ.க. வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது என்றார். மேலும் ரஜினிகாந்தின் காட்டமான அறிக்கையைத் தொடர்ந்து, த.வெ.க. நிர்வாகி உடனடியாக மன்னிப்பு கேட்டிருப்பது இந்த அரசியல் மோதலுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.