விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை ஒருவரைப் பற்றி அவதூறாகப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு, தமிழக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டித்து விழுப்புரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம், தமிழக அரசின் ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ திட்டத்தை விமர்சித்தார். அப்போது, நயன்தாராவின் பெயரைக் குறிப்பிட்டு, “அவரை எனக்குத் திருமணம் செய்து வைக்க முடியுமா?” என அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சி.வி. சண்முகத்தின் இந்தப் பேச்சுக்கு அரசியல் நாகரிகமற்றது எனப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகை குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் காரசாரமாகப் பதிலளித்துள்ளார். அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, பெண்கள், குறிப்பாக நடிகைகள் யாருடைய சொத்தும் கிடையாது. ஒரு நடிகையின் பெயர் மலிவான நகைச்சுவைகளுக்கோ அல்லது ஒருவரின் வாதத்தை நியாயப்படுத்துவதற்கான கருவியோ அல்ல.

ஒரு பெண்ணின் அடையாளத்தைப் பயன்படுத்தி மற்றவர்களைக் கேலி செய்வது, பேசுபவரின் மனநிலையையும் அவர் வளர்ந்த விதத்தையுமே வெளிப்படுத்துகிறது. இதுவே போதும், இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது.  ஒரு நடிகையைப் பற்றி இழிவாகப் பேசுவதற்கு முன், அதே உதாரணத்தைத் தனது தாய், சகோதரி அல்லது மகளுக்குப் பொருத்திப் பார்த்துப் பேச வேண்டும். மற்ற துறைப் பெண்களுக்கு அளிக்கும் அதே மரியாதையை நடிகைகளுக்கும் அளிக்க வேண்டும்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “இப்படியான தரம் தாழ்ந்த விமர்சனங்களைச் செய்பவர்கள், தாங்கள் பேசும் பெண்ணுக்கு அவமானத்தைத் தேடித்தருவதில்லை. மாறாக, தங்களுடைய குறுகிய மனப்பான்மையையும், அடிப்படை மனிதநேயமற்ற தன்மையையுமே வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்கிறார்கள். இது மனிதகுலத்திற்கே ஒரு அவமானம்,” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சி.வி. சண்முகம் ஏற்கனவே தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ள போதிலும், குஷ்புவின் இந்தக் கண்டனம் அரசியல் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.