சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் குறுங்காணொளிகள் மூலம் புகழ்பெற வேண்டும் என்ற மோகத்தில் இளைஞர்கள் மேற்கொள்ளும் விபரீத முயற்சிகள் உயிரிழப்புகளில் முடிவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் டெல்லியின் கிழக்கு தலுப்புரா பகுதியைச் சேர்ந்த பவன் என்ற இளைஞர் துப்பாக்கியுடன் காணொளி எடுக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது நண்பரின் உரிமம் பெற்ற உண்மையான துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் துணிகர முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். துப்பாக்கியில் தோட்டாவை நிரப்பி அதனைத் தனது நெஞ்சுப்பகுதியை நோக்கி வைத்தபடி அதன் விசைப்பொறியை அவர் அழுத்தியபோது தோட்டா பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்துள்ளார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அந்தத் துப்பாக்கியை வழங்கிய நண்பர் தோட்டாவை எப்படி நிரப்ப வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது தெரியவந்துள்ளது.
துப்பாக்கியைப் பூட்டிய நிலையில் தான் வழங்கியதாக நண்பர் தெரிவித்த போதிலும் அது சரியாகப் பூட்டப்படாத காரணத்தால் இந்த விபரீதம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. காணொளிப் பதிவின் போது துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டாம் என்று நண்பர் எச்சரிக்கும் குரல் பதிவாகியுள்ள நிலையில் காவல்துறையினர் இது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
