அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வரும் போர், உலக நாடுகளுக்கு ஒரு புதிய பாடத்தைக் கற்பித்து வருகிறது. அதிநவீன போர் விமானங்கள் மற்றும் விலையுயர்ந்த ஏவுகணைகளைக் காட்டிலும், ஈரானின் மலிவு விலை ‘ட்ரோன்’ (ஆளில்லா விமானங்கள்) தொழில்நுட்பம் வல்லரசு நாடுகளுக்கே சவாலாக மாறியுள்ளது.

ஈரானின் ஆட்சி அதிகாரத்தை முறியடிக்க டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா எடுத்த முயற்சிகள் தற்போது அவருக்கே நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. ஈரானின் உயரிய தலைவர் சில காலம் பொதுவெளியில் தோன்றாவிட்டாலும், அந்நாட்டு ராணுவம் ஒருங்கிணைந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குத் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போரின் மிக முக்கியமான அம்சம் ‘பொருளாதாரச் சுமை’ ஆகும். அதாவது ஈரானின் ஒரு ‘ஷாஹித்’ வகை ட்ரோனின் விலை சுமார் 32 லட்சம் ரூபாய் ($35,000) மட்டுமே.  இந்த ஒரு ட்ரோனைச் சுட்டு வீழ்த்த அமெரிக்கா அல்லது இஸ்ரேல் பயன்படுத்தும் ‘பேட்ரியாட்’ (Patriot) வகை ஏவுகணையின் விலை சுமார் 37 கோடி ரூபாய் ($4 மில்லியன்).

அதாவது, அமெரிக்கா ஒரு ஏவுகணையைச் செலவழிக்கும் தொகையில் ஈரான் 115 ட்ரோன்களை ஏவ முடியும். முதல் வாரத்திலேயே ஈரான் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியுள்ள நிலையில், மாதம் 10,000 ட்ரோன்களை உற்பத்தி செய்யும் திறனை ஈரான் பெற்றுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா தனது வான்வழி ஆதிக்கத்திற்காகப் பல நவீன போர் விமானங்களைப் பயன்படுத்தினாலும், அவை பெரும் செலவை ஏற்படுத்துகின்றன:

அதன்படி F-35 போர் விமானங்கள்: சுமார் 200 விமானங்கள் வான்வழித் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. B-2 & B-1 பாம்பர்கள்: இவை ‘ஸ்டெல்த்’ (Stealth) வகை விமானங்கள். 40,000 முதல் 75,000 பவுண்டு எடையுள்ள குண்டுகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டவை. LUCAS ட்ரோன்கள்: ஈரானின் ட்ரோன்களுக்குப் போட்டியாக அமெரிக்கா முதன்முறையாக இந்த வகை ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போரைப் போலவே, இந்தப் போரும் ‘ட்ரோன் போராக’ உருவெடுத்துள்ளது. போர் விமானங்களை இயக்கும்போது வீரர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. ஆனால், ட்ரோன்கள் தொலைவிலிருந்தே இயக்கப்படுவதால் வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.  துல்லியமான தாக்குதலை விட, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி எதிரியின் பாதுகாப்பு வளையத்தைத்  தகர்ப்பதே ஈரானின் வியூகமாக உள்ளது.

விலையுயர்ந்த ஏவுகணைகளைச் செலவழிப்பது அமெரிக்காவிற்குப் பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஈரானின் ட்ரோன்களுக்குப் போட்டியாக மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் ‘LUCAS’ (Low-Cost Uncrewed Combat Aerial System) போன்ற ஆளில்லா விமானங்களை உருவாக்குவதில் அமெரிக்கா தற்போது தீவிரம் காட்டி வருகிறது. மேலும் மிகப் பெரிய பணக்கார நாடுகள் மட்டுமே வான்வெளியை ஆள முடியும் என்ற பிம்பத்தை ஈரானின் இந்த மலிவு விலை ட்ரோன்கள் உடைத்தெறிந்துள்ளன.