விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, நடிகை ஒருவரைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரின் ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ என்ற புதிய திட்டம் குறித்து அண்மையில் விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் சி.வி. சண்முகம் விமர்சித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “மறைந்த அப்துல் கலாம் ‘கனவு காணுங்கள்’ என்று சொன்னார். ஆனால் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒருபடி மேலே சென்று ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள், அதை நான் நிறைவேற்றுகிறேன்’ என்கிறார். எனக்கு இப்ப நயன்தாரா வேணும். அவரை எனக்குத் திருமணம் செய்து வையுங்கள் என்று கேட்டால், அதை ஸ்டாலின் நிறைவேற்றி வைப்பாரா?” என்று கிண்டலாகக் கேள்வி எழுப்பினார்.

முன்னாள் அமைச்சரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவியது. ஒரு பெண்ணைப் பற்றியும், திரைத்துறைச் சார்ந்த ஒருவரைப் பற்றியும் பொதுமேடையில் இழிவாகப் பேசியதாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக, அந்த நடிகையின் ரசிகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் சி.வி. சண்முகத்தின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து, தனது பேச்சுக்கு சி.வி. சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், அந்த உரையின் போது ஒரு நடிகையின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டது. அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.  யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நான் அந்தப் பெயரைக் குறிப்பிடவில்லை. அரசின் திட்டத்தை விமர்சிப்பதற்காகவே அந்த உதாரணம் கூறப்பட்டது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் அரசியல் களத்தில் சி.வி. சண்முகத்தின் இந்த  விமர்சனமும், அதற்குத் தொடர்ந்து அவர் தெரிவித்துள்ள வருத்தமும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.