கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஜகலூரைச் சேர்ந்த வேளாண்துறை ஊழியர் அஜ்ஜப்பா மதுப்பழக்கம் காரணமாகக் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்கு 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவாகும் என்றும் தெரிவித்தனர்.

தனது தந்தையின் உயிரைக் காப்பாற்றப் போராடிய அவரது 25 வயது மகள் சந்தனா தனது கல்லீரலின் ஒரு பகுதியைத் தானமாக வழங்க முன்வந்தார். இதையடுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் சந்தனாவின் கல்லீரலில் 40 முதல் 60 சதவீதப் பகுதியை அகற்றி அதனை அஜ்ஜப்பாவுக்குப் பொருத்தினர்.

இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு அஜ்ஜப்பா உடல்நலம் தேறிப் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சந்தனா தனது தந்தையின் உயிரை மீட்கத் துணிச்சலுடன் முன்வந்து கல்லீரல் தானம் செய்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையின் மீதான பாசத்தால் மகளே கல்லீரல் தானம் செய்து உயிரைக் காப்பாற்றிய இந்தச் சம்பவத்தைப் பாராட்டிப் பல்வேறு தரப்பினரும் சந்தனாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மருத்துவ உலகில் மகளின் இந்தத் தியாகம் ஒரு முன்மாதிரியான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.