ஈரான் நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவைக் கைப்பற்றுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் இந்தத் தீவின் மீது ஏற்கனவே அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில் அங்குத் தரைப்படை வீரர்களை இறக்கித் தீவை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.
உலக நாடுகளுக்கு எண்ணெய் கொண்டு செல்லும் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து முடக்கப்பட்டு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டால் மட்டுமே இந்த அதிரடி நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கும் என்று கூறப்படுகிறது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதி இந்தத் தீவு வழியாகவே நடைபெறுவதால் இதனைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக முடக்க முடியும் என்று அமெரிக்கா கருதுகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மூண்டுள்ள சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைச் சீர்செய்யத் தனது நட்பு நாடுகளின் கடற்படைகளை அங்குப் பணியில் ஈடுபடுமாறு அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
இந்த மோதல் காரணமாகப் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு நூறு டாலர் வரை உயர்ந்துள்ளதால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.
அதே நேரத்தில் ஈரான் வசம் உள்ள இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து செல்லக்கூடிய அதிநவீன ஏவுகணைகள் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளைத் தகர்க்கும் வல்லமை கொண்டவை என்பதால் இந்தப் போர் சூழல் மேலும் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
