கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் (த.வெ.க.) தலைவர் விஜய், டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், இனிவரும் விசாரணைகளை தமிழகத்தில் நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி, த.வெ.க. தலைவர் விஜய் தனது தமிழக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகக் கரூருக்குச் சென்றார். அங்கு வாகனத்தின் மேற்கூரையில் நின்று அவர் தொண்டர்களிடையே உரையாற்றியபோது, கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே த.வெ.க. இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் தமிழக உயர் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது. விஜய் கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டெல்லி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவரிடம் நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த விசாரணையின் போது, காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்ததாக விஜய் தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.
முந்தைய விசாரணைகளைத் தொடர்ந்து, மீண்டும் ஆஜராகுமாறு விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அதன்படி, நேற்று முன்தினமே டெல்லி சென்ற விஜய், நேற்று காலை 10.30 மணியளவில் கசி.பி.ஐ. அலுவலகத்திற்கு வந்தார். காலை 11 மணிக்குத் தொடங்கிய விசாரணை பல மணி நேரம் நீடித்தது. விசாரணை முடிந்தவுடன் அவர் உடனடியாகச் சென்னைக்குப் புறப்பட்டார்.
இதற்கிடையே, சி.பி.ஐ. மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி ஆகியோருக்கு விஜய் தரப்பில் கடந்த 14-ஆம் தேதி ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பாதுகாப்பு மற்றும் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, இனிவரும் விசாரணைகளைத் டெல்லிக்கு மாற்றாகச் சென்னை அல்லது தமிழகத்தின் வேறு ஏதேனும் ஒரு பகுதியில் நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேர்தல் முடியும் வரை சிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு கோரியும் நடிகர் விஜய் அனுமதி கேட்டதாக ஒரு தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
