சென்னையில் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் ஒருவர், ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு மையத்திற்கு வந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள இ.சி.ஐ (ECI) பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருபவர் மாணவர் ரிஷிகேஷ். இவர் அசோக் நகரில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதி வருகிறார். கடந்த 11-ஆம் தேதி தமிழ் தேர்வு எழுதச் சென்றிருந்தபோது, அவருக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. தேர்வு முடிந்ததும் உடனடியாக கிண்டியில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மாணவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்குக் குடல்வால் அழற்சி (Appendix) பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, கடந்த 12-ஆம் தேதி அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. உடல்நிலை முழுமையாகக் குணமடையாத நிலையிலும், தனது ஓராண்டு உழைப்பு வீணாகிவிடக்கூடாது என்பதில் மாணவர் உறுதியாக இருந்தார். இதற்குக் கல்வித் துறையும், மருத்துவமனையும் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, இன்று காலை 9.30 மணியளவில் கிண்டி அரசு மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் தேர்வு மையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மாணவர் என்பதால், அவருக்குத் தேர்வு மையத்தில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அவரால் சுயமாக எழுத முடியாத சூழல் இருந்ததால், அரசுத் தேர்வுகள் துறை சார்பில் ‘சொல்வதை எழுதுபவர்’ (Scribe) ஒருவரை நியமித்தனர். மாணவர் சொல்லச் சொல்ல, ஆசிரியர் விடைகளை எழுதினார்.

மூன்று மணி நேரத் தேர்வு முடிந்த பிறகு, மாணவர் மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வலியையும் பொருட்படுத்தாமல் தேர்வெழுதிய மாணவரின் உறுதியைக் கண்டு ஆசிரியர்களும் பெற்றோர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.