மும்பை கார் மேற்கு பகுதியைச் சேர்ந்த 38 வயது தொழிலதிபர் பங்கஜ் யாதவ் என்பவர் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான பெண்ணால் நூதன முறையில் ஏமாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தேரி கிழக்கு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அந்தப் பெண்ணைச் சந்திக்கச் சென்ற தொழிலதிபர் அங்கு அவருடன் மது அருந்தியுள்ளார். சிறிது நேரத்தில் முக்கிய வேலை இருப்பதாகக் கூறி அந்தப் பெண் அங்கிருந்து நழுவிய நிலையில் உணவக ஊழியர்கள் சுமார் 18000 ரூபாய்க்கான ரசீதை வழங்கியுள்ளனர்.

சாதாரண மதுபானத்திற்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்த போதிலும் உணவக ஊழியர்கள் மிரட்டி அவரிடமிருந்து பணத்தைப் பறித்துள்ளனர். இது குறித்துத் தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர் திஷா என்ற பெண்ணைக் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட சில உணவக உரிமையாளர்களுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு டேட்டிங் செயலிகள் மூலம் வசதியான ஆண்களைக் கவர்ந்து மோசடியில் ஈடுபடும் பெரிய கும்பல் ஒன்று பின்னணியில் இருப்பது அம்பலமானது. இதன் அடிப்படையில் 5 பெண்கள் மற்றும் உணவக மேலாளர் உள்ளிட்ட 21 பேரை காவல்துறையினர் கூண்டோடு கைது செய்துள்ளனர்.

திட்டமிட்ட மோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இத்தகைய செயலிகள் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.