அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் 17-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் தனது ஆயுதக் கிடங்கில் உள்ள மிக ஆபத்தான ‘செஜில்’ (Sejil) ரக பாலிஸ்டிக் ஏவுகணைகளை முதன்முறையாகப் போர்க்களத்தில் இறக்கியுள்ளது. இந்த நடவடிக்கையினால் மத்திய கிழக்கு ஆசியாவில் போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஈரானின் இந்த ‘செஜில்’ ஏவுகணை தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்டது. இதன் சிறப்பம்சங்கள் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. இது ஒலியின் வேகத்தை விட 12 முதல் 14 மடங்கு அதிக வேகத்தில் செல்லக்கூடியது.
ஈரானிலிருந்து ஏவப்பட்டால், இஸ்ரேலைச் சென்றடைய இந்த ஏவுகணைக்கு வெறும் 7 முதல் 8 நிமிடங்கள் (சுமார் 500 வினாடிகள்) மட்டுமே ஆகும். இது 2000 முதல் 2500 கி.மீ தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இதன் மூலம் ஒட்டுமொத்த இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளையும் ஈரானால் இலக்கு வைக்க முடியும்.
இரண்டு நிலைகளைக் கொண்ட இந்த ஏவுகணை திட எரிபொருளில் இயங்குகிறது. இதனால், திரவ எரிபொருள் ஏவுகணைகளைப் போலன்றி, இதனை மிகக் குறுகிய காலத்தில் தயார் செய்து ஏவிவிட முடியும். இது எதிரி நாட்டு ரேடார்களில் சிக்காமல் தப்பிக்க உதவுகிறது.
இஸ்ரேல் பெருமையுடன் கருதும் ‘அயன் டோம்’ (Iron Dome) அல்லது ‘ஆரோ’ (Arrow) ஆகிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளைத் தகர்க்கும் திறன் ‘செஜில்’ ஏவுகணைக்கு இருப்பதாக ஈரான் உரிமை கோருகிறது. இதன் அதீத வேகம் மற்றும் திசையை மாற்றும் திறன் காரணமாக, இதனை நடுவானில் இடைமறித்து அழிப்பது மிகவும் கடினம் எனக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் அச்சத்தால் இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் அதிதீவிர எச்சரிக்கை (High-Alert) விடுக்கப்பட்டு, பொதுமக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரானிய ஊடகங்களின்படி, ‘செஜில்’ என்ற பெயர் புனித குர்ஆனில் உள்ள ‘சூரா அல்-ஃபீல்’ என்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. இப்பெயர் எதிரிகளை அழிக்கும் கற்களைக் குறிப்பதாகும். 2008-ஆம் ஆண்டு முதன்முதலில் சோதனை செய்யப்பட்ட இந்த ஏவுகணை, தற்போது போரில் பயன்படுத்தப்படுவது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
“அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ தங்களது தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால், இதைவிடக் கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயங்கமாட்டோம்” என ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரித்துள்ளது.
