மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரானின் உயர்மட்டத் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் எடுத்துள்ள அதிரடி முடிவுகள் அமெரிக்காவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

தங்கள் தலைவர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன ரடார் (Radar) அமைப்புகளை ஈரான் தனது முதல் தாக்குதலிலேயே அழித்தது. மேலும், அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் உள்ள இடங்களை இலக்கு வைத்து ஈரான் தீவிரத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. எதிர்பாராத விதமாக, வளைகுடா நாடுகள் பலவும் இந்த விவகாரத்தில் அமெரிக்காவிற்கு எதிராகத் திரும்பி ஈரானுக்கு மறைமுக ஆதரவு அளித்து வருகின்றன.

உலகளாவிய கடல் வழி வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை  ஈரான் முழுமையாக மூடியுள்ளது. இதனால் அமெரிக்காவின் பொருளாதாரத்திற்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு பல பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுவதால், எப்படியாவது இந்த கடல் வழியைத் திறக்க அமெரிக்கா போராடி வருகிறது. ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த மோதலில் தலையிட விரும்பாமல் விலகியே இருக்கின்றன.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஸ்தம்பித்துள்ளது. இது குறித்து ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது, ஈரானே தீர்மானிக்கும். விரைவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 200 டாலரைத் தாண்டும் என எச்சரித்துள்ளது.

இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த, இதுவரை எந்த ரஷ்யாவின் எண்ணெய் மீது அமெரிக்கா தடை விதித்திருந்ததோ, அதே ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குமாறு இப்போது உலக நாடுகளை அமெரிக்கா கெஞ்சி வருகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்க உதவுமாறு சுமார் 7 நாடுகளுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். ஆனால், எந்தவொரு நாடும் அமெரிக்காவிற்கு உதவ முன்வராதது ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் அவமானமாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் ஈரான் தற்போது அமெரிக்காவிற்கு விடுத்துள்ள நேரடி மிரட்டலில், “தைரியம் இருந்தால் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை ஈரானின் எல்லைக்கு அருகே கொண்டு வந்து காட்டட்டும்” எனச் சவால் விட்டுள்ளது. அமெரிக்காவின் ஒட்டுமொத்த பாதுகாப்புத் திட்டங்களையும் ஈரான் தவிடுபொடியாக்கியுள்ளதால், மத்திய கிழக்கில் போர் எப்போது வேண்டுமானாலும் ஒரு உலகளாவிய மோதலாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.