தமிழக அரசியல் களம் தற்பொழுது பெரும் பரபரப்பைச் சந்தித்து வரும் நிலையில், திமுக அரசுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரும், முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இதனால் மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “மக்களின் உண்மையான ஆதரவைப் பெற்ற ஒரே இயக்கம் தவெக தான்; எதிர்காலத்தை நம்பித்தான் பலரும் இந்த கட்சியில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும், திமுகவின் தேர்தல் வெற்றிகள் குறித்துப் பேசிய அவர், கூட்டணி கட்சிகளின் பலம் மற்றும் ஆதரவு மட்டும் இல்லையென்றால், கடந்த பொதுத்தேர்தலில் வெறும் 10 தொகுதிகளில் கூட திமுகவால் தனித்து வெற்றி பெற்றிருக்க முடியாது என்று மிகக் காட்டமாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
இந்நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் மீதும் தனது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்த ஆதவ் அர்ஜுனா, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அதிமுகவினர் யாரும் கட்சியை விட்டு வெளியேறவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி சூழ்ச்சி செய்துதான் வெற்றி பெற்றார் என்றும் சாடினார்.
இதனை தொடர்ந்து தவெகவின் அசுர வளர்ச்சியைப் பார்த்துப் பயந்துதான் திமுகவின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அடிப்படைப் பணிகளில் கூட ஒத்துழைப்பு தராமல் முட்டுக்கட்டை போடுவதாகக் குற்றம் சாட்டினார்.
இதனால் எந்தவொரு அரசியல் கட்சியும் திமுகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், மக்கள் தவெக தலைவர் விஜய் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகவே, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக ஒரு மேயர் பதவியைக் கூட வெல்ல முடியாத அளவிற்கு மக்கள் அவர்களுக்குப் பாடம் புகட்டுவார்கள் என்று சவால் விடுத்துள்ளார்.
