திமுக அரசு விளம்பரத்தில்தான் முன்னேறி உள்ளது என்றும், நடிகர் வடிவேலு திமுக-விற்காகப் பிரச்சாரம் செய்யச் செய்ய அந்த கட்சி அழிந்துவிடும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் விமர்சித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு கூறியதாவது, தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது, பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிட்டது. முதல்வர் ஸ்டாலின் விளம்பரம் செய்வதில்தான் கவனம் செலுத்துகிறார். பேப்பரைத் திறந்தாலே அவருடைய படம்தான் உள்ளது. ‘உன்னைப்போல பார்க்கவில்லை’ என்கிற பாட்டு போல, விளம்பரத்தில் மட்டுமே இந்த அரசு முன்னேறியுள்ளது. மக்களுக்கு நல்லது செய்திருந்தால் இவ்வளவு விளம்பரம் தேவைப்பட்டிருக்காது. முன்பு ‘ஏரியல்’ சோப்புக்கு விளம்பரம் செய்ததைப் போல இப்போது முதல்வருக்கு விளம்பரம் செய்கிறார்கள்.
நடிகர் வடிவேலுவின் அரசியல் வருகை குறித்துப் பேசிய அவர், “வைகைப்புயல் வடிவேலு பேசட்டும். அவர் பேசப் பேச திமுக அழிந்து போகும். 2011-ஆம் ஆண்டு வடிவேலுவும், குஷ்பூவும் புயலாகக் கிளம்பி என் தொகுதியிலேயே வந்து பேசினார்கள். பெரிய கூட்டத்தைப் பார்த்து நானே பயந்துவிட்டேன். ஆனால், வடிவேலுவின் ராசி அப்படி; அவர் யாருக்குப் பேசுகிறாரோ அந்த கட்சிக்குத் தோல்விதான். வடிவேலுவின் உள்மனதில் திமுக வரக்கூடாது என்றுதான் இருக்கும்” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
திமுக கூட்டணியில் உள்ள கமல்ஹாசன் குறித்துப் பேசுகையில், “கமல்ஹாசனின் டார்ச்லைட்டை திமுக பிடுங்கிவிட்டது. இதனால் அவர் சமூக வலைதளங்களில் கொதித்துப்போய் உள்ளார். திமுக ஆட்சியில் சமூக நீதி எங்கே இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், தூத்துக்குடி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்துக் குறிப்பிடுகையில், “திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவே இருக்காது என்று கனிமொழி சொன்னார். ஆனால், அவர் தொகுதியிலேயே மது மற்றும் போதையால் ஒரு மாணவி உயிரிழந்துள்ளார். அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லச் சென்ற கனிமொழியை மக்கள் துரத்தியுள்ளனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள இந்த ஆட்சியை ஆண்டவனால் கூடக் காப்பாற்ற முடியாது” என்றார்.
