பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரை விட ஐபிஎல் (IPL) தொடருக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஜிம்பாப்வே வீரர் பிளெஸ்ஸிங் முசாரபானி, பிஎஸ்எல் ஒப்பந்தத்தை முறித்துவிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இணைந்திருப்பது தற்போது விவாதமாகியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த வங்கதேசத்தின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரகுமான், அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அந்த இடத்திற்கு முசாரபானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, பிஎஸ்எல் தொடரில் இஸ்லாமாபாத் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்திருந்த முசாரபானி, ஐபிஎல் வாய்ப்பு கிடைத்ததும் அந்த ஒப்பந்தத்தை உதறிவிட்டு கொல்கத்தாவில் இணைந்துள்ளார். முஸ்தாபிசுர் ரகுமான், தற்போது லாகூர் அணிக்காக பிஎஸ்எல் தொடரில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.
ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் லீக் தொடர்கள் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், வீரர்கள் இத்தகைய முடிவுகளை அடிக்கடி எடுக்கின்றனர். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க வீரர் கார்பின் போஷ், பிஎஸ்எல்-ல் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முறித்துவிட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடச் சென்றார். இதனால், அவர் மீது பிஎஸ்எல் நிர்வாகம் ஒரு சீசன் விளையாடத் தடை விதித்தது. அதேபோன்றதொரு தண்டனை முசாரபானிக்கு வழங்கப்படுமா என்பது தற்போதைக்கு கேள்விக்குறியாகவே உள்ளது.
இதற்கிடையில் இங்கிலாந்தில் நடைபெறும் ‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை ‘சன்ரைசர்ஸ் லீட்ஸ்’ அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அணி, இந்தியாவில் ஐபிஎல்-ல் விளையாடும் ‘சன்ரைசர்ஸ் ஹைதராபாத்’ அணியின் உரிமையாளரான ‘சன் குரூப்’ நிறுவனத்திற்குச் சொந்தமானது.
சன் குரூப் நிறுவனம், இங்கிலாந்தின் ‘நார்தர்ன் சூப்பர் சார்ஜர்ஸ்’ அணியின் 100 சதவீத பங்குகளை (49% இங்கிலாந்து வாரியத்திடம் இருந்தும், 51% யார்க்ஷயர் கிளப்பிடம் இருந்தும்) வாங்கி, அதற்கு ‘சன்ரைசர்ஸ் லீட்ஸ்’ எனப் பெயர் மாற்றியுள்ளது. தற்போது, இந்திய நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு அணியில் பாகிஸ்தான் வீரர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
