வாரணாசியிலிருந்து அகமதாபாத் நோக்கிச் சென்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின், அதிபாதுகாப்புமிக்க ‘ஃபர்ஸ்ட் ஏசி’ (1st AC) பெட்டியில் பயணித்த மருத்துவ மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

அதாவது மருத்துவ மாணவி ஒருவர் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் அதே பெட்டியில் பயணித்த அமித் சிங் யாதவ் என்ற நபர், மாணவியை மிரட்டி போதைப்பொருள் கலந்த உணவுப் பொருளைக் கொடுத்து மயக்கமடையச் செய்ய முயன்றார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்த நிலையில், அந்த நபர் அத்துமீறிப் பாலியல் தொல்லை கொடுத்து, தவறான முறையில் பிடிக்க முயன்றார்.

மாணவியின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அருகில் இருந்த சக பயணிகளும், ரயில் டிக்கெட் பரிசோதகரும் (TTE) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து பின்வாங்கினார். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியும் பயமும் அடைந்த மாணவி, தனது தாயைத் தொடர்புகொண்டு நடந்ததைக் கூறியுள்ளார். உடனே அவரது தாயார், ‘எக்ஸ்’  தளத்தில் ரயில்வே துறை மற்றும் உத்தரப் பிரதேச போலீஸாரைத் டேக் செய்து, தனது மகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை விளக்கி, குற்றவாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி உருக்கமான கோரிக்கை விடுத்தார்.

பெற்றோரின் கோரிக்கையைத் தீவிரமாகக் கவனித்த லக்னோ கோட்ட ரயில்வே மேலாளர்  மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள், லக்னோ கட்டுப்பாட்டு அறைக்கு உடனடி தகவல் அனுப்பினர். ரயில் நள்ளிரவில் லக்னோ சார் பாக் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும், அங்கிருந்த அரசு ரயில்வே போலீஸார் அந்தப் பெட்டிக்குள் புகுந்து, அமித் சிங் யாதவை வளைத்துப் பிடித்தனர்.

தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் லட்சுமி சிங் தலைமையிலான குழுவினர் பாதிக்கப்பட்ட மாணவியிடம் வாக்குமூலம் பெற்றனர். மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் “ரயில்களில் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படும் ‘ஃபர்ஸ்ட் ஏசி’ பெட்டியிலேயே இத்தகைய கொடூரம் நடந்திருப்பது, இரவு நேரப் பயணங்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை உணர்த்துகிறது” எனப் பயணிகள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. மேலும், ரயில் பெட்டிகளில் போலீஸாரின் தீவிர கண்காணிப்பும், ரோந்துப் பணிகளும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.