மகாராஷ்டிர மாநிலம் புனேவில், பக்கத்து வீட்டுப் பூனைக்கும் வளர்ப்புப் கிளிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, இறுதியில் இரு வீட்டாருக்கு இடையேயான பெரும் மோதலாக மாறி போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது. அதாவது அபிஷேக் சிங் என்பவர் தனது வீட்டில் கிளி ஒன்றை வளர்த்து வருகிறார். இந்தக் கிளியின் கூண்டு எப்போதும் வீட்டின் முன்புறம் வைக்கப்பட்டிருக்கும். இவருக்குப் பக்கத்து வீட்டில் வசிப்பவர் தினேஷ் ரங்காராவ். இவர் தனது வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் தினேஷின் பூனை அந்தப் பகுதியில் சுதந்திரமாகச் சுற்றித் திரிவது வழக்கம். இந்த நிலையில், அந்தப் பூனை அடிக்கடி அபிஷேக் சிங்கின் வீட்டின் முன் வந்து, கிளிக்கூண்டைத் தட்டிவிடுவதும், கிளியைப் பயமுறுத்துவதுமாக இருந்துள்ளது. பலமுறை கிளிக்கூண்டு கீழே விழுந்ததால் ஆத்திரமடைந்த அபிஷேக் சிங், தனது பக்கத்து வீட்டுக்காரரான தினேஷிடம் பூனையை ஒழுங்காகக் கட்டிப் போடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

பூனை விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே முதலில் வாய்மொழித் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில், இரு குடும்பத்தினரும் இதில் தலையிட்டதால் விவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி, கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த மோதலில் அபிஷேக் சிங்கிற்கு காயம் ஏற்பட்டது.

கிளிக்காகத் தொடங்கிய சண்டை ரத்தக் களரியில் முடிந்ததையடுத்து, அபிஷேக் சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பதிவு செய்த காவல்துறையினர், பூனையின் உரிமையாளர் தினேஷ் ரங்காராவ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சாதாரண வளர்ப்புப் பிராணிகளுக்காக அண்டை வீட்டாருக்கிடையே ஏற்பட்ட இந்த மோதல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.